81th KDB (80)- Arulmigu Munnuthiththa Nangai Amman Thirukkovil, Sucheenthiram, Agastheeswaram Taluk. (Major Temple)

kdb - 80(4)Arulmigu Sucheenthiram Munnuthiththa Nangai Amman Thirukkovil


Location Map


 

முப்பெருந் தேவியர் வழிபட்ட முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில் ….❤️🌹🙏

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் மகிமையை நாமறிவோம். இவ்வூருக்கு வரும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில், அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில். நாஞ்சில் நாட்டில் `நங்கை’ எனும் ஒட்டுப்பெயர் உள்ள பெண் தெய்வங்கள் அதிகம். அழகிய பாண்டியபுரம் வீரவ அங்கை, தெரிசனங் கோப்பு ஸ்ரீதரநங்கை, பூதப்பாண்டி அழகிய சோழன் நங்கை, குலசேகரபுரம் குலசேகர நங்கை எனப் பல பெண் தெய்வங்கள் குமரி மாவட்டத்தில் வழிபாட்டில் உள்ளன.
இவர்களில், முன்னுதித்த நங்கை அம்மனின் திருக்கதை சுசீந்திரம் கோயிலின் தலபுராணத்துடன் இணைந்தது. இந்த நங்கை காத்தியாயினியின் அம்சம்; இந்திரனால் பூஜிக்கப்பட்டவள் என்பர்.
அனுசுயா தேவியின் பதிவிரதா மகிமையால் குழந்தைகளாகிவிட்ட மும்மூர்த்தியரும் மீண்டும் பழைய வடிவத்தைப் பெறவேண்டும் என்று லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் காத்யாயினி நோன்பு இருந்தார்களாம். அவர்களுக்குக் காட்சிகொடுத்த தெய்வமே அருள்மிகு முன்னுதித்த நங்கை என்கின்றன ஞானநூல்கள்.

கெளதம முனிவர் தந்த சாபத்துக்கு விமோசனம் வேண்டி இந்திரன் வேள்வி செய்தபோது, ஜோதி ரூபமாக முன் உதித்தவள் இவள். இந்திரன் 300 கன்னியர்களைச் சாட்சியாக வைத்து பூஜித்தபோது தோன்றியவள் இந்த அம்மன். இப்படியான கதைகளும் வழக்கில் உள்ளன.

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் ஸ்வாமி திருக்கோயிலின் விழாத் தொடக்கத்திலும் நிறைவிலும் சிறப்பு வழிபாடுகளை இந்த முன்னுதித்த நங்கை அம்மன் பெறுகிறாள். விழாவின் முதல் நாளன்று ஆங்கார பலிச் சடங்கு நடைபெறும். தேர்த் திருவிழாவுக்கு முந்தையநாள் இரவு முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறும். அதேபோல் விழாவின் 10-ம் நாளன்று, வட்டப் பள்ளி ஸ்தானிகர் அம்மனின் கோயிலில் மெளன பலி நடத்துவார். அதேபோல் நவராத்திரியையொட்டி, விஜயதசமி அன்று அம்மன் கோயிலின் உற்சவர் அம்பாள், திருவனந்தபுரத்துக்குப் பாரிவேட்டைக்கு எழுந்தருளிச் செல்வாள்.
முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலின் பழைமை 10-ம் நூற்றாண்டு வரை செல்கிறது. இங்கே மரபு வழியாக பூஜை செய்துவருவோர், பிற்காலச் சோழர்கள் காலத்தில் சுசீந்திரத்தில் குடியேறியவர்களாம்.

1621-ம் ஆண்டின் கல்வெட்டு ஒன்று அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது பற்றி விவரிக்கிறது. கோச்சடையன் மாறன் காலத்தில் வழங்கப்பட்ட முன்னூற்று நியாயம் (ஒரு வகை நிவந்தம்) குறித்த விவரமும் கல்வெட்டில் உண்டு. ஆக, ஆரம்ப காலத்தில் சோழ வணிகர்களுடன் வந்த தெய்வம் இவள் என்றும் ஒரு கருத்து உண்டு.
சுசீந்திரம் தெப்பக்குளத்தின் அருகிலுள்ளது முன்னுதித்தநங்கை அம்மனின் திருக்கோயில். தெற்கு வடக்காக அமைந்துள்ள ஆலயத்தில், பக்தர்கள் தெற்கு வாயில் வழியே நுழைந்து வடக்கு நோக்கி அருளும் அம்மனைத் தரிசிக்க வேண்டும்.
வடப்புறம் முன்மண்டபத்தில் வன்னியன், வன்னிச்சி, தளவாய் மாடன், சாஸ்தா, பைரவர் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தின் மேற்கில் மோகினியும் பஞ்ச கன்னியரும் உள்ளனர். முகமண்டபத்தின் தென்மேற்கில் மாரியம்மன் மற்றும் அறம் வளர்த்த அம்மன் ஆகியோர் சந்நிதி கொண்டிருக் கிறார்கள்.
கருவறையில், வடக்குநோக்கி ஆயுதபாணியாக எட்டுத் திருக் கரங்களுடன், மகிஷாசுரனை வதைக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள் முன்னுதித்த நங்கை அம்மன். ஆகவே, இந்த அம்பிகை மகிஷாசுரமர்த்தினி என்ற பெயரிலும் வணங்கப்படுகிறாள்.

இந்த அம்மனின் விக்கிரகம் கடுசர்க்கரையால் ஆனது என்கிறார்கள். பெண்கள் தாங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும், சுசீந்திரம் வரும் அன்பர்கள், முதலில் இந்தக் கோயிலுக்கு வந்து முன்னுதித்த நங்கை அம்மனைத் தரிசித்து வழிபட்ட பிறகே தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலுக்குச் செல்கிறார்கள்.
அதிகாலை 5:30 மணிக்குத் திறக்கப்படும் அம்மனின் ஆலயத்தில் 11 மணியளவில் நடை சாத்தப்படும். மீண்டும் மாலையில் 5 மணிக்குத் திறக்கப்பட்டு, 8 மணிக்கு நடை சாத்துகிறார்கள்.
ஆன்மிக சுற்றுலாவாக கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் செல்லும் பக்தர்கள், முன்னுதித்த நங்கை அம்மனையும் அவசியம் வணங்கி வழிபட்டு வாருங்கள். அவளருளால் எடுத்த காரியம் தங்குதடையின்றி நிறைவேறும்; வாழ்க்கை வளம் பெறும்.🙏🙏🙏