12th KDB – Arulmigu Attinkara Krishnaswamy Thirukkovil, Azhagiyapaandipuram, Thovala Taluk (Minor Temple)

kdb-122Arulmigu Attinkara Krishnaswamy Thirukkovil


Location Map


நாஞ்சில் நாட்டு உத்திரவாஹினி கரையில் ஸ்ரீகிருஷ்ணன் !

தேனோங்கு சோலைத் திருவேங்கடம் என்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திரு அத்தியூர் என்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்.
என்று திருவேங்கட மாலை எனும் நூலில் சொல்லும் வண்ணம் ஒர் தலம், நம் நாஞ்சில் நாட்டிலும் உண்டு கண்டீர்,,,,,,,,
ஆம்,,,!

சோழநாட்டில்,
காவிரி நதி, இரண்டாகப் பிரிந்திட,,,,,,
நதியின் நடுவில் ஒரு தீவு உருவாக,,,,,
அந்த தீவினில் கிளிக்கூட்டங்கள் சுற்றிச்சுற்றி வலம் வர,,,, கிளிகள் சுற்றும் காரணம் யாதென அறியும் ஆவலில் தேட,,,,,
காவிரிக் கரையில் அறிதுயில் கொண்டிருந்த அரங்கன் வெளி வந்தான் !
அன்றிலிருந்து இன்று வரை ! திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் புகழ்பெற்று விளங்குகிறது !

அப்படியொரு நதி,,,,,காவிரி போல இரண்டாகப் பிரிந்தல்ல,,,,,,
ஒற்றை நதியாகவே,,,ஸ்ரீகிருஷ்ணசுவாமி எனும் ,குழந்தை வடிவ கண்ணன் அவனைச் சுற்றி வந்து பயணித்துக் கொண்டிருக்கிறது ! குமரி மாவட்டத்து திருவட்டாற்றிலும் இவ்வண்ணமே ! ஆனால் திருவட்டாற்று ஆதிகேசவர் அறிதுயில் கொள்கிறார் !
நாஞ்சில் நாடு எனும் குமரி மாவட்டத்தில்,,, ஒரு நதி அப்படிச் சுற்றி வருகிறதா ?

அதெப்படி ?
இன்று நாஞ்சில் நாட்டில் ஒடுகின்ற பழையாறு மேற்கிலிருந்து , கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குகிறது !
சுருளோட்டில் ஆரம்பிக்கிற பழையாற்றின் இப்பயணம்,,,நாஞ்சில் நாட்டினுள் புகும் பொழுது, காணாபத்யம் எனும் கணபதி வழிபாட்டினைக் குறிக்கும், வீரவநல்லூர் கற்பக விநாயகர் கோவிலைத் தாண்டி, சைவம் எனும் சிவ வழிபாட்டினைக் குறிக்கும், ஞாலம்,எனும் ஊரில் உதய மார்த்தாண்ட மகாதேவர் கோவிலைத் தாண்டி கிழக்கு நோக்கிப் பயணிக்கிறது .
ஞாலம் ஊரினை அடுத்து அழகிய பாண்டியபுரம், அருகிலுள்ள மேகரை என்கிற மேல்கரை ஊரின் வயல் வெளிகளினுடே பயணிக்கிற பழையாறு, ஓரிடத்தில் தான் பயணிக்கிற கிழக்கு நோக்கிய திசையினை மாற்றி சற்று தூரம் தெற்கு நோக்கிப் பாய்ந்து,,,,, சட்டென்று மீண்டும் மேற்கில் பயணித்து , அதே வேகத்தில் திரும்பவும் தென் திசை நோக்கிப் பயணித்து , மீண்டும் கிழக்கு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்து, அதே வேகத்தில் மீண்டும் வடக்கு நோக்கிப் பயணித்து பின் திரும்பவும்,,,எப்பொழுதும் போல மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய தன் பயணத்தினை தொடர்கிறது !

ஆம் !
ஸ்ரீகிருஷ்ண சுவாமியின் முன் தெற்கிலிருந்து வடக்காக பழையாறு ஒடுவதால் இவ்விடமும் உத்திர வாஹினி என்றழைக்கப்படுகிற புனிதத் தன்மை கொண்ட தலம் ! இது….
பழையாற்றின் வலதுகரையில் வீரவநல்லூர் கற்பகவிநாயகரும், ஞாலம் உதய மார்த்தாண்ட மகாதேவரும் அருளாசி வழங்க,
பழையாற்றின் இடது கரையில் தனக்கென்று ஒரு சின்னஞ்சிறு தீவினை உருவாக்கி, கைகளில் வெண்ணெய் ஏந்தியவண்ணம் ஸ்ரீ கிருஷ்ணன் திருக்காட்சி தருகின்றான் !

யமுனை ஆற்றின் கரையில் விளையாடிய ஸ்ரீகிருஷ்ணன் கதை படித்திருக்கிறோம் ! பழையாற்றின் கரையிலும், ஸ்ரீகிருஷ்ணன் விளையாடி நிற்கின்றான் ! நாவல் மரத்தடியில் , உத்திரவாஹினியில் களமாடித் தனித்திருக்கின்றான் !

அவனொன்றும்,,,அரங்க மாநகரத்தவனைப் போல,,, திருவட்டாற்று ஆதிகேசவரைப் போல , ஆளானவனும் , இல்லை ! ஆட்படை கொண்டவனும், இல்லை,,,, பெருங்கோவில் கொண்டவனும் இல்லை ,,, மேலும்,,,,,
அவன் ! அறிதுயிலவும் இல்லை !

துள்ளி விளையாடுகின்ற,,,,குழந்தையாக,,,,
அள்ளி அணைக்கத் தோன்றுகிற பாலகனாக,
தன் இரு கைகளிலும், வெண்ணெய் ஏந்தி நிற்கின்ற பிள்ளையாக,,,

சூடிக் கொடுத்த சுடர்கொடியான, கோதை நாச்சியார் திருப்பாவையின் 27 ஆம் நாள் பாடலில் ,,,,
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
என்று பாடுவதைப் போல,,,,,,, அவனை,,,
அத்திருக்கோவிலில் நின்றிருக்கும், அக் குழந்தைக் கண்ணனைக் கண்டால்,,,
பார்த்த விழி பார்த்திருக்கும்,,, !
வேர்த்த விழி இமைக்க மறந்திருக்கும்,, !
ஆம் !
அவன் அழகு ! பேரழகு !
அவன் சூடிய சூடகமும், தோள் வளையும், தோடும், செவிப் பூவும், பாடகமும்,,, அத்தனை அழகு !

நாம் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு, கண்ணனைப் போல அலங்கரித்துப் பார்ப்போமே ? ,,,,, அப்படி அவன் அலங்கரித்து நிற்கின்றான் !
இரு கைகளிலே வழியும் வெண்ணெயினை தாங்கியபடி,,,,, நிற்கும் பேரழகினைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும் எனும் அழகு !

அத்தனை அழகானவனா ? அவன் ! என்று கேள்வி கேட்டால்,,,,,,,
அவன் பேரழகின் உச்சம் என்றே சொல்லும் வண்ணம் நின்றிருக்கிறான் ! கண்ணனாக,
கிருஷ்ணனாக,
ஸ்ரீ கிருஷ்ணனாக,
ஸ்ரீ கிருஷ்ணசுவாமியாக,,,

ஸ்ரீகிருஷ்ணன் என்றால் கருடாழ்வார் என்கிற பெரிய திருவடி எதிரே நின்றிருக்க வேண்டுமே ?
கருடாழ்வார் நின்றிருக்கிறார் ! கண்ணனவன் இடது கை பார்த்து,,,முன் மண்டபத்து ஓரத்தில்,,,,, கூப்பிய கரத்துடன் நின்றிருக்கிறார் !

ஏன் ? கருடாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனின் எதிரே நிற்காமல்,,,,, ஓரத்தில் நின்றிருக்கிறார் ? என்றொரு கேள்வி எழுந்தால்,,,,? அதுவும் நியாயமே ?
திருக்கோவிலினுள் நின்றிருக்கும் கண்ணன் , ஸ்ரீகிருஷ்ணன் !
குழந்தை அல்லவா ,,,, !
பாலகன் அல்லவா ,,,,,,!
வெண்ணெய் திருடி அல்லவா ,,,,,,!
அவன் ஓடி விளையாடும் பருவத்தில் அல்லவா ? காட்சி தருகின்றான் !
ஓடி விளையாடும் பிள்ளையின் முன் மறிப்பது போல நின்று கொண்டிருந்தால்,,,,அவன் ஆட்டம் நின்று விடுமே ? என்பதனால் தான் கருடாழ்வார் ஓரமாக நிற்கின்றாரோ ?

இதனை விடவும்,,,,ஒரு காட்சி,,,
எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத காட்சியாக,,,,,,,,
கூப்பிய கரத்தோடு நின்றிருக்கும், கருடாழ்வாரின் முன்னால் கூப்பிய கரத்தோடு நம்மாழ்வார் அமர்ந்திருக்கிறார் ! இவரை இராமானுஜர் என்று கொள்வோரும் உண்டு .

கருடனே !
உள்ளே நின்றிருக்கிறவன் நவநீதம் உண்கின்றவன் !
அதனாலேயே அவன் அதிகம் விளையாடுகின்றவன் !
அவன் விளையாட்டினால் தான், இந்த அகிலமே இயங்கிக் கொண்டிருக்கிறது!
அவன் விளையாடட்டும் !
நீ இங்கேயே நின்றிரு,,, !
அவனுக்கு நீ காவல் !
உனக்கு நான் காவல்,,, ! என்றபடி அமர்ந்திருக்கின்றாரோ ,,,! அழகாய்,,,,

திருக்கோவிலின் கருவறை விமானத்தின் கோஷ்டங்களில் கிழக்கில் ஐராவதம் என்கிற யானையின் மீது இந்திரனும்,
தெற்கில் தென்திசைக்கடவுளும், மேற்கில் நரசிம்மரும், வடக்கில் நான்முகனும் அமர்ந்து அருட்காட்சி தருகின்றனர்.
முன் மண்டபமும், கருவறையும், கற்றளிகளாக,,,,,
சுவர் சுற்றிலுமுள்ள மகர தோரணங்களில் ,
ஒருகையில் வெண்ணெய் ஏந்தி, மறுகையினைத் தொடையில் வைத்தபடி அமர்ந்த கோலத்தில் கண்ணனும்,
அடுத்த கோஷ்டத்தின் மகர தோரணத்தில் அமர்ந்த கோலச் சிறுமியாய்,,,ஆண்டாளும், பின் புற சுவற்று மகர தோரணத்தில் நரசிம்மரும்,
மேற்குச் சுவற்றின் மகர தோரணத்தில் சங்கு சக்கரம் ஏந்தியபடி அபய வரத கரங்களுடன் நின்ற கோலத்தில் மகாவிஷ்ணுவாகப் பெருமாள் அழகிய நம்பியாய் காட்சி தருகிறார்.

மண்டபத்தின் விளிம்புகளில் குரங்கும், பாம்பும், நடனப்பெண்ணும், பல கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் !

அழகாய்ச் சுழித்து, உத்திரவாஹினியாய் ஓடும் பழையாறு !
அகன்று பரந்து பரந்தாமனைப் போலவே நிழல் தருகின்ற நாவல் மரம், அரச மரம் என இரு பெரு மரங்கள், சுற்றிலும், செம்பருத்தியும், வில்வமும், தெத்தியும், துளசியுமாய் சிறு நந்தவனச் சூழல் ,,,,இதன் நடுவே ஸ்ரீகிருஷ்ணனின் கோவில் ,,,

உங்கள் குழந்தைகளோடும், குடும்பத்தோடும், இயற்கை எழில் சூழ வயல் வெளிகளின் நடுவே அமைந்திருக்கும், இத்திருக்கோவிலுக்குச் சென்று வாருங்கள் ! குழந்தைக் கண்ணனவன் அருளைப் பெற்று வாருங்கள் !

அவனைப் பார்த்தாலே ,,,போதும்,,,,
நம் மனம் மகிழும்,,, !
அத்தனை அழகானவன் ! அற்புதமானவன் !
அவன் கொடுப்பான் நமக்கு நவநிதியம்,,, !

செல்லும் வழி ;
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைத் தாலுகா ,அழகிய பாண்டியபுரம் ஊரின் வனச்சரகர் அலுவலகத்தின் எதிரே செல்லும் சாலையில் சென்றால் மேகரை, பேயோடு எனும் இரு வழிகள் பிரியும் இடத்தில், மேகரைக்குச் செல்லும் வழியில் சென்று,,,,வயல் வெளிகளின் ஊடே நடந்து செல்லும் போது,,,, மரக்கூட்டங்களின் நடுவே,,,, கண்ணன் அவன் காத்திருக்கின்றான் !
உங்களோடு விளையாட,,,,
உங்களோடு பேச,,,,,,,,,,,

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களில் 12 வது கோவிலாக உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோவில், ஒரு காலத்தில், மிகவும் புகழ்பெற்ற மைனர் கோவிலாக விளங்கி இருக்கிறது.
திருக்கோவிலுக்கான நிலங்களும், செல்வங்களும், நிரம்பி இருந்தனவென்றும், இவர் பெயரைக் கொண்டோரே, தன் பெயருக்கு மாற்ரிக் கொண்டாரெனவும், செவி வழிச் செய்திகள் உலா வருகின்றன.

இன்றோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காலையும், மாலையும், பூசனைகள் செய்ய்யும், சந்தான கிருஷ்ணன் எனும் அர்ச்சகரைத்தவிர அந்த மாயக் கண்ணனை தரிசிப்போர் குறைவாகி விட்டனர்,,,,
அவன் கண்ணில் நாம் படுவோமே !
நம் துயரெலாம் களைவோமே,,,, !

அர்ச்சகர் சந்தான கிருஷ்ணன் அவர்களின் தொடர்பு எண்; 8189808044

எழுத்து; குலசை . அ.வேலுப்பிள்ளை , 9790134379
a.velupillai@gmail.com