Arulmigu Harihara Vinayagar Thirukkovil
அது !
16 ஆம் நூற்றாண்டு !
இன்றைய நாஞ்சில் நாட்டு அழகியபாண்டிய புரத்து, கேசவன் புதூர் கிராமத்தில் அரிகர விநாயகர் கோவிலில் உள்ள புதுவூர் மடத்தில் இருந்து கொண்டு மாதங்கள்தோறும் வருகின்ற துவாதசி நாளன்று பன்னிரெண்டு அடியவர்களுக்கு , பராங்குசதாதர் என்னும் ஒரு அடியவர் நமக்காரம் செய்து பல வெஞ்சனங்களுடன் ஊட்டு எனும் உணவு படைத்து வந்திருக்கிறார்.
பன்னிரு அடியார்களுக்கு உணவிட்டு சிறப்பிக்கும் அளவிற்கு , தேவையான நிலங்களை , ஆரியக்கரை வாத்தக்குடி பரதேசிகளில் ஒருவரான கணேச சர்மா மாதவ பட்டர் அவர்களின் கணக்காக,
அழகிய பாண்டியபுரம் வடபற்று வடவாற்று கூடு வயலும்,
உண்ணியூர் கொற்றவன் பாறைப் பற்றில், உள்ள நிலங்களும் , தன்மதானமாக அளிக்கப்பட்டு,,,,,
இந்த நிவந்தங்கள் , சந்திர சூரியர் உள்ளவரை தடையில்லாமல் நடந்து வர வேண்டும் என்றும்,
இந்த உணவிடும் நிகழ்ச்சிக்குத் தடை ஏற்படுத்தியவர்கள் , கங்கைக்கரையில் காராம் பசுவினைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும்,
அதேசமயத்தில், இந்த தன்ம தானங்கள் தடையின்றி நடந்து வர செய்பவர்களுக்கு, அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும், என்றும், ஹரிஹர விநாயகர் கோவிலின் முன்னுள்ள இரண்டு கல்வெட்டுகள் சொல்கிறது.
இப்படியொரு கல்வெட்டுச் செய்தியைப் படித்தவுடன்,,,,
ஆஹா,,,,இவ்வளவு சிறப்புடையதா ? இத்திருக்கோவில்,,,,! அப்படியானால், இத்திருக்கோவில் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்குமே ? எப்படியும், பார்த்து விட வேண்டும்,,,! அசுவமேதயாகம் செய்த புண்ணியம் பெற்றவர்கள் பலர் இருப்பார்களே ?
அவர்களைப் பார்த்தாலே போதுமே ?,,,,
ஆமாம்,,,
அடியார்க்கும், அடியேன்,,,,என்று சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் கூடச் சொல்லி இருக்கிறாரே ,,,,
ஆம்,,,!
இப்போது,,,
இத்தகைய சிறப்பு மிக்க அரிகர விநாயகர் கோவிலைப் பார்க்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றியிருக்குமே ? அப்படியே தான் எனக்கும்,,,,,,
வாருங்கள்,,,,,,,, கேசவன் புதூர் அரிகர விநாயகரை தரிசித்து வரலாம்,,,,,
இன்றைய குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து ,
எண் 4 , 4 ஏ , கேசவன்புதூர் , கீரிப்பாறை, பேருந்திலேறி,,,,
ஒரு காலத்தில், குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையாக, விளங்கிய புத்தேரிக் குளத்தினைத் தாண்டிச் செல்கிற சாலையில் , பேருந்து பயணிக்கையில்,
நேற்றைய கிராமங்கள் , இன்றைய நகர நாகரீகத்திற்கு ஆசைப்பட்டு, தன் முகத்தை காங்கீரிட் காடுகளைக் கொண்டு அரிதாரம் பூச முயற்சித்துக் கொண்டிருக்கிற அவலங்களைத் தாண்டி,,,,
அந்த நாஞ்சில் நாட்டின் பசுமை,,,,,,,
அன்றைய விஜயநகர படைகளும், நாயக்க மன்னர்களும், பல ஜாஹீர்களும், கிழக்கிந்திய கம்பெனியினரும், பொறாமை கொண்டு அடிக்கடி கொள்ளையடித்துக் கொண்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டு வளம்,,,,நாஞ்சில் நாட்டுப் பசுமை, பல காலங்கள் தாண்டியும், இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது,,,, என்பதே ,நம் கண்களை வியக்க வைக்கிறது !
விழி விரிய வைக்கிற வியப்புகளுடன், அதனை ரசித்தபடியே, இறச்ச குளம், துவரங்காடு, பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, கடுக்கரை விலக்கு, அழகிய பாண்டிய புரம், எட்டாமடை தாண்டி, கேசவன் புதூருக்கு பேருந்து வருகிற போது மனம், மயங்கினாலும், ,,,,
உடலும்,வலிக்கத்தான் செய்கிறது !
அத்தனை அழகான சாலைகள் ! தங்கள் கோர முகம் காட்டுகின்றன !
கேசவன் புதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து, கீரிப்பாறை செல்லும் தார்ச்சாலையில், பேருந்து செல்லும் சாலையிலேயே, சிறிது தூரம் நடக்க, அரசு மேல்நிலைப்பள்ளி, போற்றியூர் என பெயர் பலகை கண்ணில் படுகிறது.
பள்ளியின் எதிரே செல்லும் சாலையில் பயணிக்க,,,, சிறிது தொலைவில்,
ஹரிகர விநாயகர் கோவில்,,,,,,,,,,,,,,,, ! சுவற்ரில் ஒரு பெயர் பலகை.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே,,,
என்று ஒளவை எனும் தமிழ்க்கிழவி பாடிய முழுமுதற்கடவுளான விநாயகர் அருளாட்சி செய்யும், திருக்கோவில் கண்ணில் படுகிறது.
கம்பிக் கதவுகளை விலக்கித் திறந்து திருக்கோவில் வளாகத்தினுள் நுழைந்தால்,,,,
இரு விளக்குத் தூண்கள் ! இருதூண்களின் நடுவிலொரு பெரிய கனத்த பலகைக் கல் !
ஒரு முன்னூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன் , இந்தத் திருக்கோவில் , எவ்வளவு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது ! என்பதற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது !
ஆம் !
இரு விளக்குத் தூண்களுக்கு நடுவில் இருக்கிற அந்த பலகைக் கல்லின் இருபுறமும் கல்வெட்டுகள் !
ஒரு புறத்துக் கல்வெட்டு கிபி 1650 ஆம் ஆண்டிலும்,
மற்றொரு புறத்துக் கல்வெட்டு கிபி 1655 ஆம் ஆண்டிலும் , கொடுக்கப்பட்ட நிவந்தங்களுக்கு சாட்சியாக சந்திர சூரியர் உள்ளவரை சொல்வதற்காக வெட்டப்பட்டிருக்கிறது..
விளக்குத் தூண்களையும், கல்வெட்டினையும், தாண்டி , நாம் விநாயகரின் ஆலயத்தினை நோக்க ,
நாம் ஒரு செய்தியினை காகிதத்தில் எழுதத் துவங்கும் போது, காகிதத்தின் மேற்பகுதியில் ‘’உ ‘’ என்று எழுதுவோமே ! அப்படியானதொரு அமைப்பில் கோவில் அமைந்துள்ளது.
உ என்கிற எழுத்தின் தொடக்கத்தில் உள்ள சுழி போன்று சற்றே உள்வாங்கிய நிலையில் ,முன் மண்டபம் தாண்டி கருவறையில் அரிகரவிநாயகர் திருக்காட்சி தருகிறார். கருவறையின் மேல் விமானம் அமைந்துள்ளது . கருவறை விமானத்தின் நான்கு திசைகளிலும், ஐந்துகரத்தான் திருக்காட்சி தருகிறார்,,,, திசையெங்கும் நான் தானே காவல் என்றபடி பூதகணங்களும் காட்சி அளிக்கின்றன.
உ என்கிற எழுத்தின் நீட்டல் பகுதியில் நம் கண்களுக்கு அருகே சிவனார் லிங்க உருவில் எதிரே நந்தியுடன் திருக்கோலம் கொண்டிருகிறார்.
மூல முதல்வரான மகனும், உலகிற்கே தந்தையான சிவனும், கிழக்கு நோக்கி அருளாசி வழங்குகிற அழகான சிறிய கற்கோவில் தான்.
சிவனுக்கு எதிரே, தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு வந்த நந்தி பகவான் இருக்கிறார் !
ஆனால்,,,,
விநாயகரின் முன்னால்,,,,,அவரின் வாகனமான மூஞ்சுறு இல்லையே ? சுற்றிச் சுற்றித் தேடினாலும், அவரின் வாகனத்தினைக் காணவில்லை,, ஒருவேளை விநாயகர் அமர்ந்திருக்கும், பீடத்திலேயே ,
மூஞ்சுறு இருக்கிறதோ ? தேடினால் அங்கும் காணவில்லை,,,,
எங்கே அவரென்று தேடுகையில்,,,,சட்டென்று எதிரே அமைந்திருக்கிற விளக்குத் தூணின் பக்கம் நம் பார்வை செல்ல,,
விளக்குத் தூணின் மேற் திசையில் விநாயகரை நோக்கியபடி, பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு எதிரே கருடாழ்வார் நின்ற கோலத்தில் வணங்கி நிற்பது போலவே , அடியவர் ஒருவர் இருகரம் கூப்பி வணங்கியபடி நின்று கொண்டிருகிறார்.
யார் ? அவர்,,,!
கைகளிலும், கால்களிலும், வீரக்கழல்கள் அணிந்தபடி , அரிகர விநாயகருக்கு எதிரே நிற்பவர்,,இதோ,,,அருகில் இருக்கின்ற கல்வெட்டுக்கள் சொல்கிற புதுவூர் மடத்தினை நிர்வகித்த பராங்குசதாதராக இருக்கலாமோ ?
என் கடன் பணி செய்து கிடப்பதே !
இது என் பணி என்று கரங்குவித்த வண்ணம் நிற்கும் பணிவு ! ஆம்,,அப்படித்தான் என்று எண்ணத் தோன்றுகிறது !
முன்பொரு காலத்தில், ஹரிகர விநாயகரையும், இத்திருக்கோவிலையும், மேலப்புதுவூர் மடத்தினையும், போற்றிப் பாதுகாத்து வந்த பராங்குச தாதரை வணங்கியபடியே,
முழு முதற்கடவுள் என்று தமிழ் கூறும் நல்லுலகு சொல்லும் விநாயகரை வணங்குகிறோம்.
மேலிரு கரங்களில் பாசம், அங்குசம், தாங்கிய விநாயகர்,
வலது கரம் அபயம் காட்ட, இடது கரத்தினில் மோதகம் தாங்கி, அந்த மோதகத்தினையும், ஐங்கரன் என்றழைக்கப்படுவதற்குக் காரணமான ஐந்தாவது கரமான தும்பிக்கையால் தொட்ட வண்ணம் அரிகர விநாயகர் அருளாசி வழங்குகிறார்.
நம்பிக்கையுடன் தும்பிக்கையானை வணங்கி விட்டு ஆலயத்தினை வலம் வருகிறோம்.
பண்டு பழம் பெருமைகளைச் சுமந்தபடி நிற்கிற கோவில் தான் என்றாலும், கருவறை விமானத்தின் சிற்பங்கள், பன்னிரு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்த கதையினை , அதன் வண்ணங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
மீண்டும் அவன் கழலடி பாதம் காணும் முன்,,,,
உ என்கிற சுழியின் வடிவினைக் காட்ட விநாயகரும்,
உ என்கிற எழுத்தின் நீட்டலாக உள்ள வடிவினைக் காட்டும் வண்ணமாக, சிவனார் , விநாயகரின் இடது கைப் பக்கம், முன்னுள்ள கோவிலில் நந்தியுடன் திருக்காட்சி தருகின்றார்.
தென்னாடுடைய சிவனை, எந்நாட்டவர்க்கும், இறைவனை, வெளியில் நின்று தான் தரிசிக்க வேண்டும்,,,
ஆம், ! அப்படியானதொரு சிற்றிடத்திலேதான் திருச்சிற்றம்பலத்தான் குடி கொண்டிருக்கிறார்.
பொன்னார் மேனியனாம் சிவன் கொலுவிருக்கும், மண்டபத்தின் பக்கவாட்டில், சரக்கொன்றை மரம் பூத்து பூவாய்ச் சொரிந்து கொண்டிருக்கிறது. கொன்றை முடி சூடியவனுக்காக,,, !
திருக்கோவிலை வலம் வருகையில், ஒரு புறம் மேடை போன்ற அமைப்பு காணப்படுகிறது,,, !
நாகர்களும், வஜ்ரதேவரும், அமர்வதற்காக அமைக்கப்பட்ட மேடை,,, ! இப்பொழுது காலியாகக் கிடக்கிறது..
அரிகர விநாயகர் கோவிலினை வலம் வந்த போது,,,
கோவிலின் இடது புறம் பார்க்க, வட திசையில் நீண்டு பரந்த திடல்,,,,,
திடலின் வடதிசை ஓரத்தில், பெரும் வாகை மரமொன்று கிளை பரப்பி நிற்க, அதனருகே விழுது விட்டு நிற்கிற ஆலமரத்தின் கிளையொன்றில் சர விளக்கொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது !
சற்று தள்ளியொரு வேப்ப மரம் !
வேப்ப மரத்தின் கிளைகளில் மணியொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது !
மணி காற்றிலாடும் போது மணியோசை எழும்ப,,,,,
அந்த மணியோசை,,,காளீ, காளீ, என்றே ஒலிப்பது போல,,,,
அதன் அருகிலொரு பீடம்,,,,,
பீடத்தில்,,,,
முன்பொரு காலத்தில்,
அன்றைய நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வங்கள் !
ஆம் !
மலை மக்கள்,,,,மலையிலிருந்து சமநிலத்திற்கு குடி வந்த போது, தங்களது தாய்த் தெய்வமான பத்ரகாளியினை பிடி மண்ணாக எடுத்து வந்து , கல் நட்டு, வருடந்தோறும், தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றதன் அடையாளமாக,,,,
மேலும், சில பீடங்கள் காட்சி தருகின்றன !
இயக்கி என்றும், மாடன் என்றும் வணங்கப்படுகின்ற அத்தெய்வங்கள், நமக்கும், அருளட்டும் என்றே வணங்கியபடி வருகையில்,,,
திருக்கோவிலின் வளாகத்தின் பல பகுதிகளில் செங்கல் வரிகள் தரை முழுக்க சிதறிக் கிடக்கின்றன !
முன்பொரு காலத்தில், புதுவூர் மடம் இருந்த இடம்,,,தான், இன்று காலப் போக்கினில் இடிந்து சிதைந்து செங்கல் வரிகளாக நம் கண் முன் இறைந்து கிடக்கிறதோ ?
யாரறிவார் ?
கேசவன் புதூர் , மேலப்புதூவூர் சிவன் அறிவாரோ ?
இல்லை ஹரிகர விநாயகர் தான் அறிவாரோ ? கேள்விகள் பல உண்டு,,, பதில் சொல்வார் யாரும் மெளனம் கலைக்கவில்லை எனும்,,,தளர்வுடனேயே கடக்கின்றோம்,,,,
இத்திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களின் படியே பெரு நிலங்கள் உள்ளவரான ஹரிகர விநாயகர் இன்று சரியான கவனிப்பின்றி, ஒரு வேளை பூஜை செய்யும் கோவிலாக மாறிப் போன நிலையில்,,மீண்டும்,,,
ஹரிகர விநாயகர் தன்னை முன்னிறுத்திக் கொள்வாரா ?
முந்தி விநாயகனே ! முன் வந்து பதில் சொல் என்கிற வேண்டுதலோடு,,,
குலசை.அ.வேலுப்பிள்ளை,
கோவை , 9790134379

You must be logged in to post a comment.